களத்தில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்த விராட் கோலி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங் செய்த போது ஆஸ்கர் விருது வென்று ‘நாட்டு நாட்டு’ பாடலின் ட்ரேட்மார்க் நடன அசைவுகளை போட்டு மகிழந்துள்ளார் இந்திய வீரர் விராட் கோலி. அதை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது. இந்தப் பாடலின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆஸ்கர் விருதை பெற்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஃபீல்ட் செய்தபோது விராட் கோலி, ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன அசைவுகளை போட்டிருந்தார். ஸ்லிப் ஃபீல்டராக அவர் நின்றபோது இந்தப் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 75 ரன்கள் எடுத்திருந்தார். ஜடேஜா 45 ரன்களும், கேப்டன் பாண்டியா 25 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த தொடரின் இரண்டாவது போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.