விற்பனை குறைவாக உள்ள மது கடைகள் கணக்கெடுப்பு

சென்னை : மது விற்பனை மிகவும் குறைவாக உள்ள மது கடைகளின் எண்ணிக்கையை, ‘டாஸ்மாக்’ கணக்கெடுத்து வருகிறது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,310 சில்லரை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகையை விற்பனை செய்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள தலா ஒரு கடையில் தினமும் சராசரியாக, 3 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகின்றன.
அதே நேரம், கிராமங்களில் தொலைதுார இடங்களில் உள்ள கடைகளில் விற்பனை மிகவும் குறைவாக உள்ளது. இந்த கடைகளுக்கான வாடகை உள்ளிட்ட செலவினங்கள் அதிகம் உள்ளன. இதையடுத்து, மது விற்பனை மிகவும் குறைவாக உள்ள கடைகளின் விபரங்களை கணக்கெடுக்கும் பணியில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறுகையில், ‘வணிக வளாகங்களில் நவீன மது கடைகள் செயல்படுகின்றன. அவற்றில் ஒரு கடையின் வாடகை 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளது; ஆனால், விற்பனை குறைவு. ‘எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் விற்பனை குறைவாக உள்ள கடைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.