திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் போட்டி…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி சென்னையில் லிபர்டி மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள பதிவு, டி.சார்ட் வழங்குதல் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இளைய சமுதாயத்திடம் மாரத்தான் மிகவும் பிரபலமாகி வருகிறது. உலகில் ஏதாவது ஒரு மூலையில் மராத்தான் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குருதி கொடை உள்பட சமூக விழிப்புணர்வுக்காக மராத்தான் நடத்தப்படுகிறது. கலைஞர் நினைவு மாரத்தான் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. முதல் ஆண்டு ஆசியாவில் அதிகமானவர்களுடன் ஓடியது.
2வது மராத்தான் போட்டி நடத்தி சாதனை முறியடிக்கப்பட்டது. 3-வது ஆண்டு சென்னையில் நடத்திய மராத்தான் போட்டியில் 43 ஆயிரம் பேர் பங்கேற்று ஆசிய சாதனை படைக்கப்பட்டது. 2 ஆண்டுகள் பெறப்பட்ட பதிவு தொகை அரசுக்கு தரப்பட்டது. 3வது ஆண்டு நடத்தப்பட்ட மராத்தான் பதிவு தொகையான 1.22 கோடி ரூபாய், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தங்கும் விடுதி கட்ட முதலமைச்சரிடம் தந்தோம்.
முதலமைச்சர் நமக்கு நாமே திட்டத்தில் 5 கோடி ரூபாய் கட்ட உத்தரவிட்டு அதற்கான பணிகள் 10 நாளில் தொடங்க உள்ளது. கலைஞர் 4வது ஆண்டு மறைவு மராத்தான் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது. இதற்கான பதிவு ஏப்ரல் 1ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த முறை மாரத்தான் போட்டியை கின்னஸ் சாதனையாக படைக்க உள்ளோம்.
மராத்தானில் 1 லட்சத்திற்கு மேல் பங்கேற்க உள்ளோம். உலகிலேயே அதிகம் பேர் பங்கேற்ற மாரத்தானாக கலைஞர் நினைவு மாரத்தான் இருக்கும். தினமும் மாரத்தான் நடத்தினாலும் ஓட ஆட்கள் இருக்கின்றனர். 10 கிலோ மீட்டர் மராத்தான் ஓடியதில்லை. முதன் முறையாக சமத்துவத்திற்கான மாரத்தானில் ஓட உள்ளேன். 13ம் தேதி நடத்தும் மாரத்தானில் நாங்கள் கலந்துகொள்கிறோம். நடப்பது, ஒடுவது தான் உடல்பயிற்சியில் சிறந்தது. இதற்காக ஒரு சிறந்த அறிவிப்பை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்” என்றார்.