டில்லி, மும்பை விரைவு ரயில்கள் இனி 130 கி.மீ., வேகத்தில் செல்லும்

சென்னை : தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட, சில முக்கிய பாதைகளில் மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து மும்பை, டில்லி விரைவு ரயில்களின் பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறையும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதை அமைப்பது, ரயில் பாதையின் தரம் மேம்படுத்துவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இதனால், விரைவு ரயில்கள் தாமதம் குறைவதோடு, பயண நேரம் சிறிய அளவில் குறைந்து வருகிறது.
அதன்படி, தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட, முக்கிய வழித்தடங்களான தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் – காஜிப்பேட், ஆந்திரா மாநிலம் விஜயவாடா – கூடூர், ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா – குண்டக்கல் போன்ற முக்கிய ரயில் சந்திப்புகளில், ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
அதையடுத்து, இந்த ரயில் பாதைகளில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்ல, ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.இதனால், தாமதம் இன்றி செல்வதோடு, பயண நேரமும் குறையும்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:விஜயவாடா – கூடூர், ரேணிகுண்டா – குண்டக்கல் உள்ளிட்ட ரயில் பாதைகளில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல, நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த தடத்தில் மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டன.
தற்போது, ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், சென்னையில் இருந்து டில்லி, மும்பை செல்லும் விரைவு ரயில்கள் தாமதம் இன்றி செல்லும்.அதேபோல், 20 முதல் 30 நிமிடங்கள் வரையில் பயண நேரமும் குறைய வாய்ப்புகள் உள்ளன. மற்ற வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.