தமிழகம்

மூத்த அதிகாரிகளை நியமித்து மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைப்படுத்தவும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் மூத்த அதிகாரி ஒருவரை பொறுப்பு அதிகாரியாக நியமித்து வடிகால் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகள் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பல முறை வெள்ளத்தில் மூழ்கியதும், அதனால் சென்னை மாநகர மக்கள் அனுபவித்த கொடுமைகளும் எவராலும் எளிதில் மறக்க முடியாத கொடுந்துயரம் ஆகும். அத்தகைய நிலை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்காக சென்னையில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டாலும் மந்தமாக நடைபெறும் பணிகளால் நடப்பாண்டும் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், பேரிடர் மேலாண்மை வல்லுனருமான திருப்புகழ் தலைமையிலான குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் சென்னையில் பல்வேறு கட்டங்களாக வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அப்பணிகளில் குறிப்பிடத் தக்க வகையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்பது தான் கவலையளிக்கும் விஷயமாகும்.

சென்னை அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 3 மண்டலங்களில் ரூ.120 கோடியில் இந்த பணிகள் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு பகுதியிலும் 10% முதல் 30% வரை மட்டுமே பணிகள் நடைபெற்றுள்ளன. இதே வேகத்தில் பணிகள் நடைபெற்றால் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக இவற்றில் எந்தப் பணிகளையும் நிறைவேற்றி முடிக்க முடியாது. எடுத்துக்காட்டாக சென்னை அசோக் நகர் 18வது நிழற்சாலையில் 10% பணிகள் கூட முடியவில்லை. அப்பகுதியில் பணிகளை முடிக்க நவம்பர் மாதம் வரை கெடு அளிக்கப் பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் பருவமழை தொடங்கக் கூடிய நிலையில், நவம்பர் மாதத்தில் தான் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும் என்றால், அப்பகுதி வெள்ளத்தில் மிதப்பதை எப்படி தடுக்க முடியும்? ஆனால், நவம்பர் மாதத்திற்குள்ளாகக் கூட பணிகள் முடியாது என்பது தான் கள நிலைமை ஆகும்.

கடந்த ஆண்டு பெய்த மழையில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி கேகே நகர் ராஜமன்னார் சாலை தான். அங்கு வாகனங்களே மூழ்கும் அளவுக்கு பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியிருந்தது. அப்பகுதியில் ரூ.28.17 கோடியில் மழைநீர் வடிகால்களை அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று வரை பணிகள் தொடங்கப்படவில்லை. மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணிகள் காரணமாக ஒட்டுமொத்த போக்குவரத்தும் அந்த சாலையில் திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், அங்கு உடனடியாக பணிகளை தொடங்கவும் முடியாது; பணிகளை மேற்கொள்ளாவிட்டால் மழைக்காலத்தில் அப்பகுதி மூழ்குவதை தடுக்கவும் முடியாது.

இத்தகைய சூழலில் வல்லுனர்களுடன் கலந்தாய்வு செய்து ஏதேனும் சிறப்புத் திட்டத்தை வகுத்தாக வேண்டும். ஆனால், அத்தகைய முயற்சிகள் எதையும் சென்னை மாநகராட்சி மேற்கொள்வதாக தெரியவில்லை. இந்த அலட்சியம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். தியாகராயநகர், ஆழ்வார்பேட்டை, வட சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட பெரும்பான்மையான பகுதிகளிலும் இது தான் நிலைமை ஆகும்.

கொசஸ்தலையாறு வடிகால் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளும் இதே வேகத்தில் தான் உள்ளன. மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பலமுறை நேரில் ஆய்வு செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. பணிகள் தாமதமாக காரணம், ஒப்பந்த விதிகளில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையில் பணியாளர்கள் ஈடுபடுத்தப் படாதது தான்.

மழை நீர் வடிகால்கள் அமைக்கப்படும் எந்த இடத்திலும் ஒப்புக்கொள்ளப்பட்ட அளவில் 50% எண்ணிக்கையிலான பணியாளர்கள் கூட ஈடுபடுத்தப்படவில்லை என்பது தான் கசப்பான உண்மை. அதிகபட்சமாக இன்னும் 4 மாதங்களில் இந்தப் பணிகள் நிறைவடையாவிட்டால் சென்னை இந்த ஆண்டும் பெரும் வெள்ளத்தையும், துயரத்தையும் எதிர்கொள்ளும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து பணிகளுக்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதையும், பருவமழைக்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் மூத்த அதிகாரி ஒருவரை பொறுப்பு அதிகாரியாக நியமித்து வடிகால் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your Adblocker