புதிய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியை 15% ஆக குறைக்கத் திட்டம்!

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை, நிறுவன மற்றும் சேவை மேம்பாட்டு மையங்களாக மாற்றியமைக்க உள்ளனர். இதற்கான சட்ட மசோதாவில் வர்த்தக அமைச்சகம் தனது முன்மொழிவை வழங்கியுள்ளது. அதன்படி நிறுவன மற்றும் சேவை மேம்பாட்டு மையங்களில் புதிதாக அமைக்கப்படும் உற்பத்தி அலகுகளுக்கு கார்ப்பரேட் வரியை 15% ஆக்க உள்ளனர். தற்போது கார்ப்பரேட் வரி 22% ஆக உள்ளது.
பாராளுமன்றத்தின் நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறுவன மற்றும் சேவை மேம்பாட்டு மைய மசோதாவை (Development of Enterprise and Service Hubs – DESH) கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்களை மாற்றியமைக்கும் சட்ட மசோதா இது. 2006ல் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் படி அந்த மையங்களில் அமைந்த தொழில் நிறுவனங்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு ஏற்றுமதி வருமானத்தில் 100% வருமான வரி விலக்கு பெற்றன. அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50% வருமான வரி விலக்கும் பெற்றன. மேலும் பல சலுகைகள் கிடைத்தன.

அக்டோபர் 2019ல் உலக வர்த்தக அமைப்பு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், ஒப்பந்த மீறல் என தீர்ப்பளித்தது. எனவே உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறப்பு பொருளாதார மண்டலங்களை, நிறுவன மற்றும் சேவை மேம்பாட்டு மையங்களாக அரசு மாற்றியமைக்கிறது. இதற்கான சட்ட மசோதாவை அக்டோபர் மாதத்திற்குள் அமல்படுத்த வர்த்தகத் துறை திட்டமிட்டுள்ளது.
இச்சட்ட மசோதா ஏற்றுமதியை ஊக்குவிப்பதைத் தாண்டி, மேம்பாட்டு மையங்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் நிறுவனங்கள் தொடங்குவதற்கான சிக்கலான விதிகளை நீக்கும். இச்சட்ட மசோதாவின் ஒரு பகுதியாக கார்ப்பரேட் வரியில் சலுகை அறிவிக்க உள்ளனர். அதன்படி இம்மேம்பாட்டு மையங்களில் புதிதாக அமைக்கப்படும் உற்பத்தி அலகுகளுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு 15% மட்டுமே கார்ப்பரேட் வரி விதிக்கப்படும்.

2019ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக்கினார். மார்ச் 2023க்கு முன் உற்பத்தியைத் தொடங்கும் புதிய உற்பத்தி அலகுகளுக்கு 15 சதவீதமாக குறைத்தார். கோவிட் தொற்றால் தொழில்கள் முடங்கியதால் அக்காலக்கெடு 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வரிச்சலுகை ஏதுமில்லாமல் இருந்தது. இந்நிலையில் புதிய சட்ட மசோதா மூலம் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் கிடைக்கக் கூடும்.