பாஸ்வேர்ட் பகிர்வதற்கு செக் வைக்கும் நெட்பிளிக்ஸ்..!

நெட்பிளிக்ஸ் தனது பயனர்கள் பாஸ்வேர்ட் பகிர்வதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஓடிடி தளங்களில் முதன்மையாக விளங்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் லட்சக்கணக்கான பயனர்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் இழந்ததாக கூறப்பட்ட நிலையில், வரும் நாட்களில் அது அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கு பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பாஸ்வேர்டை பகிர்வதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், அவ்வாறு பகிரும் பயனர்களிடம் இருந்து கூடுதல் கட்டணத்தை வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது.

மேலும் குறைந்த கட்டணத்தில் ஒரு பிளானை அறிமுகப்படுத்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த குறைந்த கட்டண பிளானில் விளம்பரங்களை ப்ளே செய்யவும் முடிவு செய்துள்ளது. வீடியோக்களுக்கு இடையே விளம்பரங்களை ப்ளே செய்வதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைந்த கட்டண பிளான் மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவை அர்ஜெண்டினா, எல் சால்வடோர், டொமினிகன் குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாகவும், மற்ற நாடுகளில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
