நவீனமயமாகும் காசிமேடு மீன்பிடி துறைமுகம்


காசிமேடு: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம், 1984ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இது, 23 மீனவ கிராமங்களைச் சேர்ந்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.இங்கு, 200க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், 1,200 விசைப்படகுகள், 2,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் வாயிலாக, மீன்பிடி தொழில் நடக்கிறது. இதன் மூலம், தினமும், 1,000 டன் மீன் வகைகள் கையாளப்படுகின்றன.
இங்கிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும்; துபாய், சிங்கப்பூர், ஜப்பான், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மீன் வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு, காலை, இரவு என இரு நேரங்களிலும் மீன் விற்பனை நடக்கிறது.
அரசுக்கு பொருளாதார வருவாய் ஈட்டி தரும் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த, பல ஆண்டுகளாக மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.
இந்நிலையில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, 150 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியில், மாநில அரசு உதவியுடன், காசிமேடு மீன்பிடி துறைமுகம் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில், நாகூரார் தோட்டத்தில், 500 படகுகளை நிறுத்தும் வகையில் மெயின் வார்ப்பு தளம் மற்றும் படகு அணையும் தளங்கள் அமைக்கப்பட உள்ளன. 100 நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் நிறுத்த, படகு அணையும் தளமும் அமைக்கப்பட உள்ளது.
ஐந்து இடங்களில், ஆர்.ஓ., பிளான்ட் அமைக்கப்பட உள்ளது. மீன் விற்பனை தளங்களில், 2 கி.மீ., துாரத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட உள்ளது. முதன்மை வார்ப்பு மீன் ஏலம் விடும் பகுதியில், 200 மீட்டர் துாரத்திற்கு, மேற்கூரை அமைக்கப்பட உள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்களை பதப்படுத்தும் வகையில், ‘மீன் பதப்படுத்தும் தொழில் கூடம்’ அமைக்கப்பட உள்ளது.
மீனவர்களுக்கு மீன் ‘ஷெட்டு’கள், மீன் வலை பழுதுபார்க்கும் கூடங்கள், விசைப்படகு பழுதுபார்க்கும் கூடங்கள் உருவாக்கப்பட உள்ளன.நாகூரார் தோட்டம் புதிய வார்ப்பு தளம் துவங்கி பழைய மீன் விற்பனை தளம் வரை உள்ள, 6 கி.மீ., சாலை மேம்படுத்தப்பட உள்ளது.காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையம் முதல், காசிமேடு துறைமுகம் ஜீரோ கேட் வரை, சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. துறைமுகத்தில், சமூக விரோத செயல்களை தவிர்க்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. ராட்சத ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.