தமிழகம்

தாமதமாக தொடங்கிய அதிமுக பொதுக்குழுக் கூட்டம்; தீர்மானங்களை நிராகரிக்கிறோம்: சி.வி.சண்முகம்

சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக்கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய பொதுக்குழுக் கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கியது.

மேடையில் மூத்த நிர்வாகிகள்: பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மண்டப மேடையில், வைக்கப்பட்டிருந்த பேனரில், கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும் மேடையில் போடப்பட்டிருந்த இருக்கைகளில், அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.

இபிஎஸ்-க்கு உற்சாக வரவேற்பு: பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, கிரின்வோஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும், அதிமுக தொண்டர்கள் மலர்களை தூவி, கோஷங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏறக்குறைய 3 மணி பயணத்திற்கு பின்னர், சற்றுமுன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு நடக்கும் திருமண மண்டபத்தை வந்தடைந்தார். அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் எழுந்து நின்று அவரை வரவேற்றனர்.

ஓபிஎஸ் வருகை: கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாகவே வந்துவிட்டார். அவரது வருகையின்போது, எடப்பாடியார் வாழ்க, ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டுதால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

அருகருகே அமராத ஓபிஎஸ், இபிஎஸ்: பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மேடையில் ஒருபுறம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், மறுபுறம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அமர, இருவருக்கும் நடுவில், கட்சியின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அமர்ந்திருந்தார்.

எம்ஜிஆர்,ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை: மேடையில் வைக்கப்பட்டிருந்த கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கூட்டத்தை நடத்தி தருமாறு ஓபிஎஸ் முன்மொழிய, இபிஎஸ் வழிமொழிந்தார்.

தீர்மானங்கள் நிராகரிப்பு: அப்போது விழா மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது என்று கூறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your Adblocker