உலக வில்வித்தை: இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் உலக வில்வித்தை ரீகர்வ் பிரிவு பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது.
உலக கோப்பை வில்வித்தை சாம்பியன்ஷிப், ‘ஸ்டேஜ் 3’ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்கள் அணிகளுக்கான ‘ரீகர்வ்’ பிரிவில் தீபிகா குமாரி, சிம்ரன்ஜீத் கவுர், அன்கிதா பகத் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. தகுதிச் சுற்றில் 1920 புள்ளிகளுடன் 13வது இடம் பிடித்த இந்திய அணிக்கு, முதல் சுற்றில் விலக்கு வழங்கப்பட்டது.
நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்ற இந்திய அணி 5-1 (57-53, 57-54, 55-55) என்ற செட் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. அடுத்து நடந்த காலிறுதியில் 6-0 (59-51, 59-51, 58-50) என பிரிட்டனை தோற்கடித்தது.
அரையிறுதியில் இந்தியா, துருக்கி அணிகள் மோதின. இதில் இந்திய அணி 5-3 (56-51, 57-56, 54-55, 55-55) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது. வரும் ஜூன் 26ல் நடக்கவுள்ள பைனலில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதுகின்றன.

ஆண்கள் அணிகளுக்கான ‘ரீகர்வ்’ பிரிவில் தருண்தீப் ராய், ஜெயந்தா, பிரவின் ஜாதவ் அடங்கிய இந்திய அணி களமிறங்கியது. தகுதிச் சுற்றில் 2005 புள்ளிகளுடன் 8வது இடம் பிடித்த இந்திய அணிக்கு முதல் சுற்றில் ‘பை’ வழங்கப்பட்டது. நேரடியாக 2வது சுற்றில் பங்கேற்ற இந்திய அணி 4-5 (53-57, 58-54, 49-53, 58-50, 25-25) என ‘ஷூட்-ஆப்’ முறையில் சுவிட்சர்லாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது.
ஆண்கள் அணி சுவிட்சர்லாந்திடம் டை தான் செய்தது, ஆனால் சுவிட்சர்லாந்தின் கடைசி அம்பு மையத்துக்கு அருகில் குத்தி நின்றதையடுத்து சுவிட்சர்லாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.
ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் 3ம் தரவரிசை சைனீஸ் தைபே அணியை எதிர்கொள்கிறது. சீன தைபே அணியில் ரியோ ஒலிம்பிக்கில் ரீகர்வ் வெண்கலம் வென்ற லீ சியன் யிங் இருக்கிறார்.