உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே தேம்பி அழுத அமைச்சர்

கடலூர்: திட்டக்குடியில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற பொங்கல் சிறப்புப் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மேடையிலேயே அமைச்சர் சி.வெ.கணேசன் தேம்பி அழுத காட்சி காண்போரையும் கண்கலங்கச் செய்தது ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டும் ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.
பொங்கல் பரிசு
இந்த ஆண்டு மொத்தம் 20 பொருட்கள் – அதாவது முழு கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு மற்றும் மஞ்சள் துணிப்பை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 2.15 கோடி குடும்பங்கள் பயன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் சி.வெ.கணேசன்

இத்திட்டத்தைச் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர், அப்படித்தான் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கழுதூர் கிராமத்தில் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பை வழங்கினார். இப்பகுதியில் உள்ள 1,117 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பைப் பெற உள்ளனர்.
தேம்பி அழுத அமைச்சர்
முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசினார், அப்போது அவர் திடீரென தன் மனைவியின் இறப்பை நினைத்துத் தேம்பி அழுத தொடங்கினார். அமைச்சரின் மனைவி இறந்த பிறகு சொந்த கிராமமான கழுதூரில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால், அங்குக் கூடியிருந்தவர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்ததில் அமைச்சர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். மனைவியை இழந்த துக்கத்தில் கண் கலங்கிய அமைச்சரை அருகில் இருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தியதைத் தொடர்ந்து, பயனாளிகளுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.