இந்தியா

‘இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை’ – உ.பி. அமைச்சர் சர்ச்சை பேச்சு

“இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை; அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷத் கூறியுள்ளார்.

‘இந்தியாவின் தேசிய மொழி இந்தி’ எனக் கூறி பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் அண்மையில் சர்ச்சையில் சிக்கினார். சமூக வலைதளங்களில் அவரது கருத்துக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ‘இந்தியாவுக்கு தேசிய மொழி என்ற ஒன்று கிடையாது. இந்தி அலுவல் மொழி மட்டும் தான்’ என சமூக வலைதளங்களில் நெட்டீசன்கள் அவரை வறுத்தெடுத்தனர்.

இதையடுத்து, நாட்டின் அனைத்து மொழிகளையும் நான் சமமாக மதிக்கிறேன் என அஜய் தேவ்கன் கூறிய பிறகே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உத்தரபிரதேச மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷத்திடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

இந்தியாவில் வாழ விரும்புகிறவர்கள் இந்தி மொழியை கட்டாயமாக நேசிக்க வேண்டும். இந்தியை நீங்கள் விரும்பாவிட்டால் நீங்கள் வெளிநாட்டவர் என்றோ அல்லது வெளிநாட்டு சக்திகளுக்கு துணைப் போகிறவர்கள் என்றுதான் அர்த்தம். நாங்கள் பிராந்திய மொழிகளை மதிக்கிறோம். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், நமது அரசியலமைப்பு சட்டமே நமது நாட்டை ‘இந்துஸ்தான்’ என்றே கூறுகிறது. இதற்கு என்ன பொருள்? இந்துஸ்தான் என்பது இந்தி பேசுபவர்களின் நிலம் ஆகும். இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது. அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது குடியேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தி மொழி சர்ச்சை ஓரளவு அடங்குவதற்குள் உ.பி. அமைச்சர் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your Adblocker